
நாட்டில் ரயில் பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து பல மாநிலங்கள் மற்றும் நகரங்களை உள்ளடக்கிய 15 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், நாக்பூர்-பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே, நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயிலின் மூலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்க முடியும். அதாவது, மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 6வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த நிலையில், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிக விலை கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே முன்பதிவு திருப்திகரமாக இல்லை எனவும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்றும், அதாவது 50 சதவீத அளவுக்கே முன்பதிவு நடப்பதால், வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், கார் சேர் வகுப்பிற்கான கட்டணம் ரூ.1,075 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ரயிலில் பயணிப்பதற்காக அந்தந்த வகுப்புகளில் முன்பதிவு செய்த பயணிகள், தங்களுடைய கட்டணத்தை அப்படியே திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே கட்டணத் தொகை திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலுக்குப் பதில், தேஜஸ் ரயில் நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.