‘மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி, உயரத்தைக் குறையுங்கள்’: நீதிமன்றத்தில் விநோத மனு
மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி, அதன் உயரத்தை குறைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தென்மேற்குப் பருவ மழை இந்தியா முழுவதும் பெய்தாலும், தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்பட்டு தமிழகத்துக்குள் நுழைவதில்லை. இதனால் பிற மாநிலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு பயனளிப்பதில்லை. மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால், தென்மேற்கு பருவ மழையானது கேரளாவிற்கு அதிக பலன் கொடுப்பதோடு, 3000 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
இதற்கு காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும். சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கும் பயனை அளிக்கும், அப்படி மழை பெய்யும் பட்சத்தில் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை நாட வேண்டியதில்லை’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.