மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு
மசூதிகளில் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க கேரள முஸ்லிம் பெண்கள் உரிமை அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் மசூதிகளில் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய கேரள முஸ்லிம் பெண்கள் உரிமை அமைப்பு முடிவு செய்துள்ளது. நிசா என்ற அந்த அமைப்பின் சார்பில் தொடரப்பட உள்ள வழக்கில், பெண்களை இமாம்களாக நியமிக்க உத்தரவிடக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வரும் நிசா அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்யப்படும் என அந்த அமைப்பின் தலைவர் ஸுஹ்ரா தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மசூதிக்குள் சென்று பெண்கள் தொழுகை நடத்த அனுமதியில்லை என்று இஸ்லாமின் புனித நூலான குரானில் கூறப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப்படி ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அவரவர் நம்பிக்கையின்படி தங்கள் வழிபாட்டு உரிமை உள்ளதாகக் கூறிய அவர், சபரிமலை தொடர்பாக அண்மையில் வெளியான தீர்ப்பு போலவே, நாடு முழுவதும் மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதியை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.