மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: நாளை முதல் மக்களவையில் விவாதம்.. யாருக்கு என்ன பலம்?

மக்களவையில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை விவாதிக்க இருக்கும் சூழலில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்களின் பலம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
parliament
parliamentpt web

நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்கிழமை முதல் மக்களவையில் விவாதத்துக்கு வர உள்ளது. இந்நிலையில் மக்களவையில் இந்த தீர்மானத்துக்கு எதிராக பெரும்பான்மையை கடந்து அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களவையில் பல்வேறு கட்சிகளுக்கு உள்ள பலம் என்ன என்பதை பார்க்கலாம். மக்களவையின் தற்போதைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 539. ஆகவே பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 271.

பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே மக்களவையில் 301 உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே பாஜக மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சுலபமாக தோற்கடிக்க முடியும்.

இந்நிலையில் மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் 12 உறுப்பினர்களைக் கொண்ட பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. ஆகவே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக மேலும் 34 வாக்குகள் பதிவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணியில் இல்லாத கட்சிகளை தவிர பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக உள்ள ஆறு உறுப்பினர்களைக் கொண்ட லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ஒரு உறுப்பினரை கொண்ட அதிமுக போன்ற பல்வேறு கூட்டணி கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளன.

இந்த வாக்குகள் எந்த அளவுக்கு வலுவான பெரும்பான்மையுடன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மோடி அரசு தோற்கடிக்கும் என்பதை காட்டும் விதமாக இருக்கும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். ஆகவே ஒரு உறுப்பினரை கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி அனைத்து கூட்டணி கட்சிகளும் தவறாமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கூட்டாக எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு!

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய முயற்சி எடுத்து வரும் நிலையில், "இந்தியா" கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 51 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

தோழமைக் கட்சிகளிலே திமுகவுக்கு 24 உறுப்பினர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவ சேனா கட்சிக்கு மக்களவையில் 19 உறுப்பினர்கள் இருந்தாலும் அந்த கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக பல உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு தலா மூன்று உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

மக்களவையில் ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்சா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களவையில் தங்களுடைய அரசுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்ய தயாராக உள்ளன.

எதிர்க்கட்சி கூட்டணியில் இல்லாவிட்டாலும் மக்களவையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மசோதாவுக்கு ஆதரவாக செயல்பட உள்ளனர். இப்படி பல எதிர்க்கட்சிகள் ஒன்றாக திரண்டாலும் அரசை தோற்கடிப்பதற்கான எண்ணிக்கைகள் அவர்களிடம் இல்லை.

இதைத் தவிர மக்களவையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

எப்படியும் மோடி அரசை தோற்கடிக்க முடியாது என்பதால் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம், பின்னர் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் பதில் விளக்கம் என விவாதங்கள் முடிந்த பிறகு, வாக்கெடுப்புக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக பல எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஆகவே நம்பிக்கையில்லா தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களை பதிவு செய்வது மற்றும் அரசு தரப்பு விளக்கங்களை நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்வது என்கிற அளவிலேயே முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com