10 நாட்களே ஆன குழந்தையை ரூ.100க்கு விற்க முயன்ற தாய்: ஊரடங்கு வறுமையால் சோகம்
ஜார்கண்டில் வறுமை காரணமாக தனது 10 நாள் குழந்தையை வெறும் 100 ரூபாய்க்கு விற்கமுயன்ற தாயை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷேத்பூர் நகரில் பிறந்து 10 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை ஒரு பெண் வெறும் 100 ரூபாய்க்கு விற்கமுயன்றுள்ளார். ஒரு பெட்ரோல் பங்க் அருகே குழந்தையை வைத்துக்கொண்டு விலைக்கு வாங்கவருபவருக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸாருக்கு தகவல் தெரிந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
விசாரித்ததில், அந்தப் பெண், சாலையோரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். ஊரடங்குக் காரணமாக கடைகள் மூடப்பட்டதால், வேலையிழந்து விட்டார். இதற்கிடையே கர்ப்பமாக இருந்தபோது கணவரும் இறந்துவிட்டதால், ஆதரவின்றி தவித்திருக்கிறார். வறுமை காரணமாக குழந்தையை காப்பாற்ற முடியாது எனக் கருதி இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறி அழுதிருக்கிறார்.
போலீஸார் அங்குள்ள பால் கல்யாண் சமிதி என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம் தாய் மற்றும் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். மேலும், குழந்தையின் உறவினர்கள் யாராவது வளர்க்க விரும்பினால், 60 நாட்களுக்குள் சட்டரீதியாக குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என போலீஸார் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில் கூறியிருக்கின்றனர்.