100 விதமான தோசைகளுடன் மும்பையை கலக்கும் நடமாடும் தோசைக்கடை..
இட்லி கடை, தோசை கடை, பிரியாணி கடை என ஒவ்வொரு உணவையும் பிரதானப்படுத்தி தனித்தனி கடைகள் வந்துவிட்ட நிலையில், மும்பையில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஒரு நடமாடும் தோசைக்கடை...
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது நடமாடும் தோசைக்கடை.. சுமார் 30 ஆண்டுகளாக சீனிவாஸ் என்பவர் இந்த கடையை நடத்தி வருகிறார். காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை சுவையான தோசைகளை சுட்டு தரும் சீனிவாஸின் தோசைக் கடைக்கு, நம்மூர் அக்கா கடைகளை போலவே, அண்ணாகடை என்ற பெயரும் உண்டு..
ஒரு சைக்கிள்.. அதில் ஒரு தோசைக்கல்.. அதனுடன் காய்கறிகள் உள்ளிட்டவை அடங்கிய பாத்திரங்கள்.. இப்படி ஒரு கடையில் அப்படி என்ன கிடைக்கிறது, 30 ஆண்டுகளாக எப்படி இந்த அண்ணா கடை வெற்றிகரமாக வலம் வருகிறது என சந்தேகம் தோன்றினால், அதற்கு பதில் அந்த கடையில் 100 விதமான தோசைகள் கிடைக்கிறது என்பதுதான்... சாதா தோசையில் தொடங்கி பெரிய உணவகங்களில் கூட கிடைக்காத பீட்சா தோசை வரை, அவரது வாடிக்கையாளர்கள் ருசித்து தீர்க்கலாம்...
அண்ணா கடையில் விலையும் அதிகமில்லை என்பது அவரது வெற்றிக்கு மற்றொரு காரணம்.. இங்கு அதிகபட்ச விலையே 100 ரூபாய்தான்.. பலர் தினமும் கல்லூரி சென்றதே இந்த கடையில் தோசை உண்பதற்காகத்தான் என கூறும் அளவிற்கு, வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது அண்ணா தோசைகடை. மும்பை போன்ற பெருநகரத்தில் எத்தனையோ உணவகங்கள் இருந்தாலும், எளிமை, ருசி, தரம் போன்றவையால் அண்ணா தோசைக்கடை, பல மும்பை வாசிகளின் வாழ்வில் ஒரு அங்கமாகியிருக்கிறது.