”அம்மா... போனை கட் பண்ணிவிடாதே” - மணிப்பூர் வன்முறையில் சிதைந்துபோன கால்பந்து வீரரின் கனவு!

இந்திய கால்பந்து அணியில் விளையாடிவரும் சிங்லென்சனா சிங் கோன்ஷ் என்ற வீரரின் குடும்பமும் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்லென்சனா சிங் கோன்ஷ்
சிங்லென்சனா சிங் கோன்ஷ்twitter

மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர்

சமீபகாலமாக, மணிப்பூர் வன்முறை குறித்த செய்திகளே, இந்திய ஊடகங்களில் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குக்கி இனப் பெண்களின் நிர்வாண வீடியோ வெளிவந்து, உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என நாடாளுமன்ற அவைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களும் பலர் உள்ளனர். அதில், இந்திய கால்பந்து அணியில் விளையாடிவரும் சிங்லென்சனா சிங் கோன்ஷ் என்ற வீரரும் அடக்கம். இந்த வன்முறையில் அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதிப்பு குறித்த வலிகளை அவர் வெளிப்படுத்தியிருப்பதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PT

தூக்கத்தைத் தொலைத்த சிங்லென்சனா

மே மாதம் தொடங்கிய வன்முறையின்போது, சிங்லென்சனா, மோகன் பகான் அணிக்கு எதிராக பிளேஆப் சுற்று ஒன்றில் கேரளாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு வன்முறை குறித்த செய்திகள் வருகின்றன. இதனால் பதறிப் போவதுடன், அன்றைய இரவு தூக்கத்தையும் தொலைக்கிறார். ஆம், கடந்த மே மாதம் 3ஆம் தேதி அவர் உறங்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த பேட்டிதான் தற்போது வைரலாகி வருகிறது.

”அம்மா... போனை கட் பண்ணிவிடாதே”

அந்த பேட்டியில் அவர், “அன்றைய இரவு நானும் தூங்கவில்லை. எனது குடும்பத்தினரும் உறங்கவில்லை. நள்ளிரவு 12:30 மணியளவில் எங்களது வீடு எரிக்கப்படுகிறது. இதனால் எனது குடும்பத்தினர் பயந்தார்கள். இதுகுறித்து என் அம்மா என்னிடம் செல்போனில் பேசினார். அங்கு நடந்த விஷயங்கள் குறித்து விளக்கினார். மேலும், நானும், என் தாயாரும் யாராவது கேட்பார்களோ என்று பயந்தபடியே அவர் என்னிடம் பேசினார். ஊரே இருட்டாக இருப்பதாகச் சொன்னார்.

அதைக் கேட்டு கண்கலங்கியபடியே, இதுதான் அம்மாவிடம் பேசும் கடைசி நிமிடமாக இருக்கும் என தாம் நினைத்து, ’அம்மா... தயவுசெய்து பேசுவதை நிறுத்திவிடாதே; போனை கட் பண்ணி விடாதே. நான் உன்னுடன் பேச விரும்புகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலேயே அங்கு வெடிக்கும் துப்பாக்கிச் சத்தம் செல்போனில் விழுந்துகொண்டிருந்தது. உதவிக்காக மக்கள் ஓலமிடுவதும் என் காதில் விழுந்தபடியே இருந்தது. அது, எனக்கு அதிக பயத்தைத் தந்தது. இந்த வன்முறையில் எனது குடும்பத்தினர் எப்படியோ உயிர் பிழைத்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறக்கு நான் மே 5ஆம் தேதி மணிப்பூருக்கு திரும்பினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்லென்சனா சிங் கோன்ஷ்
சிங்லென்சனா சிங் கோன்ஷ்ட்விட்டர்

சிதைந்து போன சிங்லென்சனாவின் கனவு

இதுகுறித்து மேலும் அவர், “இந்தக் கலவரம் எங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துவிட்டது. எங்கள் வீடு தீக்கிரையாக்கப்பட்ட செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதுமட்டுமின்றி சுராசந்த்பூரில் நான் கட்டிய கால்பந்து மைதானமும் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டு நான் மன வேதனை அடைந்தேன். ஏனென்றால், திறமை இருந்தும் பணம் கட்டி பயிற்சிக்குச் செல்ல முடியாத பல இளம் வயதினர் பயிற்சி பெற, ஒரு மைதானத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் சிறந்த வீரர்களாக உருவாகி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் இந்த வன்முறைச் சம்பவத்தால் என் கனவு சிதைந்திருக்கிறது” என்று கூறினார்.

”உண்மையில் பயமாக இருக்கிறது”

தற்போது அனைத்தையும் இழந்து குடும்பத்தினருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சிங்லென்சனா, வன்முறையின் வலிகளை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார். ”இனி எங்கு திரும்புவது, எங்கு பயிற்சி பெறுவது எனத் தெரியவில்லை. உறுதியாக வீட்டுக்குச் செல்ல முடியுமா எனவும் தெரியவில்லை. எனக்கு பிற சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எல்லோருமே இதுகுறித்து வருந்துகிறார்கள். எல்லோரும் குற்றவாளிகள் இல்லை. ஆனால் உண்மையில் பயமாக இருக்கிறது. எதுவும் இப்போது கட்டுப்பாடின்றி இருப்பதால், அவர்களிடம் நான் எதுவும் கேட்க முடியாது. ஏற்கேனவே நிறைய சிக்கல்கள் உள்ளன. இந்த விஷயத்தில் நாங்கள் ஒருவரையொருவர் அணுகினாலும், அது மேலும் சிக்கலையே கொண்டுவரும் என நான் பயப்படுகிறேன். எனது குடும்பம் இன்னும் உயிருடன் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்லென்சனா சிங் கோன்ஷ்
சிங்லென்சனா சிங் கோன்ஷ்ட்விட்டர்

சிங்லென்சனாவின் பெரிய எதிர்பார்ப்பு

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தின் குமுஜாமா லைகாய் பகுதியைச் சேர்ந்தவர், சிங்லென்சனா சிங் கோன்ஷ். ஆகஸ்ட் 2017இல் சீனியர் இந்திய அணிக்காக அறிமுகமான அவர், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். மணிப்பூரில் அவர் தற்போது சிக்கியிருப்பதால், அடுத்து வரும் இன்டர்காண்டினென்டல் கோப்பையில் பங்கேற்க இயலாத சூழ்நிலையில் உள்ளார். இதுகுறித்து அணி பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகமும் அவரது சூழலைப் புரிந்துகொண்டு, அவரது குடும்பத்துடன் இருக்க அவரை அனுமதித்துள்ளது. என்றாலும், தனது குடும்பமும், மக்களும் எப்போது சொந்த இடத்திற்குத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பே அவரிடம் பெரிதாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com