மனதை மாற்றிய மகனின் மரணம் - இலவசமாக தலைக்கவசம் தரும் தந்தை
மகனின் மரணத்தை கண்டு மனம் உடைந்த தந்தை ஒருவர், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1 லட்சத்து 51ஆயிரம் ஆக பதிவாகியுள்ளதாக சமீபத்தில் புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியது. இந்த விபத்துகள் ஒட்டுமொத்தமாக முந்தைய ஆண்டை விட அதிகம் என்றும் அந்தப் புள்ளிவிவரம் விளக்கம் அளித்திருந்தது. ஆக, தினம் தினம் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தலைக்கவசம் அணிவது அவசியம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஹேந்திரா தீக்ஷித். இவரது மகன் கடந்த மாதம் தாமோஹ் மாவட்டத்திலுள்ள தேஜ்கார் பகுதியில் நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்துள்ளார். ஆகவே அந்த விபத்து மஹேந்திரா மனதை அதிகம் பாதித்துள்ளது. தன் மகனைப் போல் யாரும் இளம் வயதில் மரணத்தை தழுவக் கூடாது என முடிவெடுத்துள்ளார் இவர்.
அதை மனதில் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர், “என் மகன் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவர் அப்போது தலைக்கவசம் அணியவில்லை. ஆகவே அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. ஆகவே இனி அப்படி யாரும் இறக்கக் கூடாது என்பதற்காக இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறேன்” என்றார்.