’மக்கள் என்னுடைய குடும்பமாகவே மாறிவிட்டார்கள்’ -மலைகிராமத்தில் தங்கி சேவையாற்றும் டாக்டர்!

’மக்கள் என்னுடைய குடும்பமாகவே மாறிவிட்டார்கள்’ -மலைகிராமத்தில் தங்கி சேவையாற்றும் டாக்டர்!
’மக்கள் என்னுடைய குடும்பமாகவே மாறிவிட்டார்கள்’ -மலைகிராமத்தில் தங்கி சேவையாற்றும் டாக்டர்!

இயற்கையின் பேரழகை மலைகளில் கொட்டிவைத்திருக்கும் இமாச்சல் பிரதேசத்தின் ராக்சம் கிராம மக்கள், தங்களுக்கு ஒரு டாக்டர் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இங்குள்ள பொது சுகாதார மையத்தில், ஓர் ஆண்டுக்கு முன்புதான் டாக்டர் ஷில்பா பணியைத் தொடங்கினார். இந்தச் செய்தியை திபெட்டர் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது.

யாருமே வரத் தயங்குகிற அந்த குளிர்மிகு மலை கிராமத்தில் பணிபுரிய துணிச்சலாக வந்துவிட்டார் 29 வயதான ஷில்பா. அதற்கு முன்பு அவர் டெல்லியில் பணிபுரிந்துவந்தார். மருத்துவ சேவை கிடைக்காத பின்தங்கிய மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்துவந்தது.

ராக்சம் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருக்கும் ஹெல்த் ரிப்போர்ட் கார்டு வழங்கியுள்ளார் டாக்டர் ஷில்பா, மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தினமும் பரிசோதனை செய்வதில் கவனம் செலுத்துகிறார். அவருடைய மருத்துவப் பணிகளுக்கு மலைவாழ் மக்களிடையே பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இந்த மலை கிராமத்திலேயே அவரும் வசித்துவருவதால், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை கிடைத்துவருகிறது. கொரோனா ஊரடங்கு நாட்களிலும் சொந்த ஊரான பெங்களூருவுக்கு ஷில்பா செல்வதை மக்கள் விரும்பவில்லை. முதல் நான்கைந்து மாதங்கள் ஒரு செவிலியர்கூட இல்லாமல் தனியாகவே பணி செய்துவந்துள்ளார்.

ஊரடங்கில் ஒவ்வொரு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்று அவ்வப்போது கண்காணித்து வந்திருக்கிறார் டாக்டர் ஷில்பா. சத்தீஸ்கர் மாநிலத்தில் வளர்ந்து பல நகரங்களில் வாழ்ந்த அனுபவமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. டெல்லியில் இருந்து ஒரு நண்பரைப் பார்க்க இமாச்சல் வந்தவர் மக்கள் பணியாற்றுவதற்காக நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

"இங்கு வந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையே  முழுமையாக மாறிவிட்டது. ஆனால் இந்த மக்கள் ரொம்பவும் நட்பாக பழகுகிறார்கள். என் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். சில நாட்கள் கிளினிக்கில் கிராமத்துப் பெண்கள் எனக்குத் துணையாக பல மணி நேரம் இருப்பார்கள். வீட்டில் சாப்பிட  பாசத்துடன் அழைப்பார்கள். இங்கே பணியாற்றுவதை நான் வெறும் வேலையாக நினைக்கவில்லை. இப்போது அவர்கள் என்னுடைய குடும்பமாகவே மாறிவிட்டார்கள்" என்று மலை மக்களின் அன்பில் நெகிழ்ந்து உருகுகிறார் டாக்டர் ஷில்பா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com