மசூதி பொலிவுப் பெற உதவிய இந்து - ரம்ஜானை முன்னிட்டு செய்த நெகிழ்ச்சியான காரியம்

மசூதி பொலிவுப் பெற உதவிய இந்து - ரம்ஜானை முன்னிட்டு செய்த நெகிழ்ச்சியான காரியம்
மசூதி பொலிவுப் பெற உதவிய இந்து - ரம்ஜானை முன்னிட்டு செய்த நெகிழ்ச்சியான காரியம்

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து மதத்தை சேர்ந்த சூரிய நாராயணன் ரம்ஜான் நோன்பு துவங்கியதை ஒட்டி தன் வீட்டருகே உள்ள மசூதிக்கு புதிய வர்ணம் பூசிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

மதநல்லிணக்கத்திற்கு மகுடம் சூட வலியுறுத்தும் வகையில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் ரம்ஜான் நோன்பு துவங்கியதை ஒட்டி தன் வீட்டருகே உள்ள மசூதிக்கு புதிய வர்ணம் பூசிக் கொடுத்து அசத்தியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது வழக்கம். இருந்தபோதிலும் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள வத்தலூரில் உள்ள உம்மருல் ஃபாரூக் மசூதி புதிய வர்ணம் பூசப்படாமல் தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அசுத்தமாக இருந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் அதை தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தூய்மைபணிகள், புதிய வர்ணம் பூசும் பணிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

58 வயதான பி.வி.சூரிய நாராயணன் அந்த மசூதிக்கு அருகில் வசித்து வருகிறார். சமீபத்தில் தான் கத்தாரில் இருந்து இந்தியா திரும்பி இருந்தார். ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன் மசூதியின் சுவர்கள் அசுத்தமாகி, வர்ணம் பூசப்படாமல் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக மசூதி அதிகாரிகளிடம் விசாரித்து, வண்ணம் பூச ஏற்பாடு செய்தார். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தனது உறவினர் பிவி அஜய குமாரிடம் புதிய வர்ணம் தீட்டும் வேலையை ஒப்படைத்தார். எட்டே நாட்களில் வர்ணம் பூசும் வேலையை விறுவிறுவென முடித்து, ரம்ஜான் துவங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக புதிய வர்ணம் பூசப்பட்ட மசூதியை ஒப்படைத்தார் சூரிய நாராயணன். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சூரிய நாராயணன் செய்த செயல் பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com