கலங்கவைக்கும் காபித் தூள் விலை.. உலக சந்தை வரை கிடுகிடு உயர்வு!
நம்மில் பலருக்கும் காஃபி அருந்துவதில்தான் ஒவ்வொரு நாளும் தொடங்கும். ஆனால் காஃபி பிரியர்களை கலங்க வைக்கும் அளவுக்கு காஃபித் தூளின் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையில் காஃபி கொட்டைகளின் விலை 14 மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
காஃபி விலை உயர்வுக்கு பிரேசில் நாட்டில் நிலவும் கடும் வறட்சியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காஃபி உற்பத்தியில் 30% பங்குடன் பிரேசில்தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. அங்கு கடும் வறட்சியால் காஃபி விளைச்சல் குறைந்துள்ளது.
பிரேசிலை அடுத்து 2ஆவது இடத்தில் உள்ள ஆசிய நாடான வியட்நாமிலும் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் காஃபி உற்பத்தி 20 முதல் 30% வரை குறைந்துள்ளதாக இத்தொழிலில் உள்ளவர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
உலக காஃபி விளைச்சலில் இந்தியா 7ஆவது இடத்தில் இருந்தாலும் உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாத நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தேவை சமாளிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 86 ரூபாய்க்கும் கீழே சென்று கொண்டுள்ளதால் அதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டிய நிலை உள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் அராபிகா வகை காஃபி கொட்டை விலை 750 ரூபாயையும் ரொபஸ்டா வகை காஃபி கொட்டை விலை 500 ரூபாயையம் தாண்டி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உணவகங்களில் காஃபி விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகெங்கும் காஃபி கொட்டை உற்பத்தி குறைந்தாலும் அதன் தேவை அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. காஃபி சீசனில் அடுத்தாண்டு விளைச்சல் அதிகரிக்கும் வரை விலை உயர்வு போக்கு தொடரும் என்பது சந்தை நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.