செகந்திராபாத்: தம்பியை காப்பாற்ற முயன்ற சிறுமி, திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து பலி!
ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் மழை நின்றவுடன் செகந்திராபாத் கலாசிகுடாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி மௌனிகா தனது தம்பியுடன் பால் பாக்கெட் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது மௌனிகாவின் தம்பி கால் தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது அந்த இடத்தில் இருந்த பாதாள சாக்கடையின் மூடி திறந்திருந்த நிலையில், தம்பியை காப்பாற்ற முயன்ற மௌனிகா பாதாள சாக்கடைக்குள் விழுந்துள்ளார். இதை கவனித்த அப்பகுதி மக்கள் மௌனிகாவை மீட்க முயன்றனர். ஆனால், மழை வெள்ளம் மௌனிகாவை பாதாள சாக்கடைக்குள் அடித்துச் சென்றுவிட்டது.
இது பற்றி மௌனிகாவின் பெற்றோர் தொலைபேசி மூலம் போலீசாருக்கு புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புக் குழுவினருடன் இணைந்து மௌனிகாவை மீட்க முயன்றனர். ஆனால், மௌனிகாவின் உடல் சற்று தூரத்தில் சாலையில் கிடந்தது. இதையடுத்து மௌனிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மௌனிகாவின் மரணத்திற்கு காரணமான பாதாள சாக்கடையின் மூடியை திறந்து போட்டிருந்த கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.