இயற்கை மீதான காதல் - வனவிலங்குகளுக்காக வனத்தை உருவாக்கிய தம்பதி..!
ராஜஸ்தானில் 20 வருடங்கள் முயற்சி செய்து ஒரு குட்டி வனத்தை ஒரு தம்பதியினர் உருவாக்கியுள்ளனர்.
ஆதித்யா சிங் என்ற நபர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ராந்தம்பூர் புலிகள் காப்பகத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மூன்று குட்டிகளுடன் ஒரு புலியை மலைப்பகுதியில் அவர்கள் கண்டுள்ளனர். அந்த வனப்பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் மக்கள் அச்சத்தில் தங்கள் நிலங்களை விற்பதற்கு தயாராக இருப்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர்.
இதைக்கண்ட ஆதித்யா சிங்கின் மனைவி பூனம் சிங், ராந்தம்பூர் பகுதிக்கே குடிபெயர்ந்து விடலாம் என தெரிவித்திருக்கிறார். இயற்கை மீது காதல் கொண்ட ஆதித்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனது ஆட்சிப் பணியையே அவர் துறந்திருக்கிறார். அப்பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கிக்கொண்டு இடம்பெயர்ந்த அவர்கள், பின்னர் அருகேயுள்ள இடங்களையும் வாங்கிக்கொண்டே சென்றுள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக அங்கே ரிசார்ட் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
இவ்வாறாக இருபது வருடங்களில் 35 ஏக்கர் நிலத்தை வாங்கிய அந்தத் தம்பதியினர், அதனை ஒரு குட்டி வனப்பகுதியாகவே மாற்றியுள்ளனர். அவர்களது செயலுக்கு சுற்றுவட்டார கிராம மக்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த இடத்தை வனவிலங்குகள் வந்து செல்லும் இடமாக மாற்றுவதே தங்கள் லட்சியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கு பல வனவிலங்குகள் வந்து செல்வதாகவும் அந்தத் தம்பதியினர் கூறியுள்ளனர்.