“மீன் விற்றல் முதல் ராணுவ வீரர் வரை” மேற்குவங்க வீரரின் போராட்ட வாழ்க்கை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களில் பாப்லு சந்த்ரா என்பவரும் ஒருவர். மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள இவரது பௌரியா கிராமமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. பாப்லு சந்த்ரா இறந்துவிட்டார் என்பதையே நம்ப முடியாமல் அவரது தாய் பனாமலி மற்றும் மனைவி மிதா தவித்துள்ளனர். அவரது இல்லத்திற்கு கிராம மக்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கணவர் இறந்த செய்தி அறிந்தது முதல் வீட்டை விட்டு மனைவி மிதா வெளியே வரவேயில்லை.
ராணுவ வீரர் பாப்லுவின் தாய் பனமலி, “கடவுளே இது என்ன வகையான நீதி?. என்னுடைய கணவரை நான் இளம் வயதில் இழந்தேன். தற்போது, என்னுடைய மகனையும் பயங்கரவாத தாக்குதலில் இழந்துவிட்டேன். நேற்று காலை எனக்கு போன் செய்தான். ஹோலி பண்டிகைக்கு வீட்டிற்கு வர முயற்சிக்கிறேன். வழக்கம்போல் சாதாரணமாகதான் பேசினான். பார்த்து இருக்குமாறு கூறினேன்” உருக்கமாக கூறியுள்ளார்.
பப்லு சந்த்ரா 13வயதாக இருக்கும் போது அவரது தந்தை உயிரிழந்தார். அப்போது முதலே அவரது வாழ்க்கை போராட்டம் ஆரம்பித்துவிட்டது. சந்தையில் மீன் விற்றுக்கொண்டே பள்ளிப் படிப்பை படித்தார். தன்னுடைய 4 சகோதரிகளுக்கும் உதவியாக இருந்தார்.
தன்னுடைய மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் பௌரியா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் அவர் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்திருந்தார். சுமார் 15 நாட்கள் வீட்டில் தங்கியிருந்து பின்னர் பணிக்கு திரும்பினார். வாலிபால் வீரரான சந்த்ரா 1999ம் ஆண்டு சிஆர்பிஎப் பணியில் சேர்ந்தார்.
“கடைசியாக புதன்கிழமை அவரிடம் பேசினேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து பயிற்சி முடிந்து அப்போதுதான் காஷ்மீர் சென்றடைந்து இருந்தார். இந்த ஆண்டுடன் 20 வருட பணியை அவர் நிறைவு செய்ய உள்ளார். பணியை நிறைவு செய்து வீடு திரும்புவதாக அவர் திட்டமிட்டிருதார். அடுத்த ஆண்டுடன் அவருடைய பணி ஓய்வு வர இருந்தது” என்றார் பாப்லு சகோதரர்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்த ராணுவ வீரர் பாப்லுவின் தாய்க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். மிகுந்த சோகத்தில் இருந்த மனைவி மிதா மம்தா பானர்ஜியிடம் பேச மறுத்துவிட்டார்.