முதல்முறையாக பிரதமர் அலுவலகம் இடமாற்றம்.. சவுத் பிளாக் வளாகத்துக்கு பிரியாவிடை!
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தினம் வட இந்தியாவில், 'மகர சங்கராந்தி' என புதிய தொடக்கங்களுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், பிரதமர் அலுவலகம் ஜன.14 முதல் புதிய வளாகத்தில் செயல்படஉள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தினம் வட இந்தியாவில், 'மகர சங்கராந்தி' என புதிய தொடக்கங்களுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், பிரதமர் அலுவலகம் ஜன.14 முதல் புதிய வளாகத்தில் செயல்படஉள்ளது. சேவைக்கான மையம் என பொருள்பட, ’சேவா தீர்த்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் இனி செயல்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு சுதந்திரம் பெற்ற நாள்முதல் பிரதமர் அலுவலகம் குடியரசு தலைவர் இல்லம் அருகே அமைந்துள்ள ’சவுத் பிளாக்’ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. முதல்முறையாக பிரதமர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது என மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 78 வருடங்களாக பிரதமர் அலுவலகம் சவுத் பிளாக் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. ’சேவா தீர்த்’ வளாகத்துக்கு ஏற்கெனவே ’கேபினட் செக்ரெட்ரியேட்’ என அழைக்கப்படும் மத்திய அரசின் தலைமைச் செயலர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேசியப் பாதுகாப்பு செயலகம் இந்த வளாகத்தில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
’சேவா தீர்த்’ வளாகத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், ‘மகர சங்கராந்தி’ நாளான ஜன.14 தொடக்க விழா நடைபெறும் எனவும் பின்னர் படிப்படியாக ஜனவரி 19 முதல் 27 வரை இடமாற்ற பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபிறகு, புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுமானம் செய்யப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதேபோல் மத்திய அரசு அலுவலகங்களுக்காக புதிய நவீன வசதிகள் கொண்ட வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நார்த் பிளாக் உள்ளிட்ட வளாகங்களில் செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்கள், புதிய வளாகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பழைய நாடாளுமன்றக் கட்டடம், சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் ஆகியவற்றை அருங்காட்சியகங்களாக புதிய பரிமாணத்தில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

