ஒடிசா ரயில் விபத்து: இறந்த உறவினரின் உடல்களை 3 நாட்களாக தேடியலையும் குடும்பத்தார்! தொடரும் அவலநிலை!

கோரமான ஒடிசா ரயில் விபத்தில் தங்களுடைய உறவினர்கள் 2 பேரை இழந்த ஒரு குடும்பத்தினர், இறந்தவர்களின் உடல்களை கண்டறியமுடியாமல் தவித்து வருகின்றனர்.
Odisha Train Accident
Odisha Train AccidentTwitter

ஒடிசா பாலசோரில் நடந்த கொடூரமான ரயில் விபத்தானது, மொத்தம் 288 மனித உயிர்களை பலிகொண்டது என இன்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மரண ஓலங்களுக்கிடையே மீட்பு பணிகள் வேகவேகமாக நடந்து வந்தபோது, மற்றொருபக்கம் எப்படி விபத்து நடந்திருக்கும் என்ற பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் தொடர்ச்சியாக எழுந்தன. பின் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி இயல்பு திரும்பிக்கொண்டே இருக்கிறது...

எந்த அளவுக்கு என்றால்., விபத்து ஏற்பட்ட பாதையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் நிலை வந்துவிட்டது. ஆனாலும் இன்னும் இறந்தவர்களின் உடல்களை தேடியலையும் மக்களின் வலியானது தீராமல் தான் இருந்துவருகிறது.

Odisha Train Accident
Odisha Train AccidentTwitter

அப்படி ரயில் விபத்தில் இறந்துபோன 2 பேரின் சடலங்களை, அவர்களின் 2 சகோதரிகள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் 3 நாட்களாக தேடியலைந்து வருகின்றனர். நேபாளத்தில் இருந்து வந்திருக்கும் அவர்கள், பாலசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளை தொடர்ந்து, புவனேஷ்வரில் இருக்கும் மருத்துவமனைகளில் இறந்த இருவரின் சடலங்களை தேடிவருகின்றனர். ஆனால் இன்னமும் அவர்களது தேடல் முடியாமல் இருந்துவருகிறது.

உடன் இருப்பவர்களின் இறப்பை பார்ப்பதே கொடுமை! அதிலும் இறந்த உடல்கள் கிடைக்கவில்லை என்றால்?

இவர்கள் நான்கு பேரும், மருத்துவமனை மருத்துவமனையாக தேடியலையும் இக்கட்டான நிலையில் உள்ளனர். எங்கு செல்வது, யாரை தொடர்புகொள்வது, தங்கள் உறவினர்களின் முகத்தையாவது பார்த்துவிட மாட்டோமா என்று வலியுடன் இருந்துவருகின்றனர். இறந்துபோனதாக தெரிவிக்கப்பட்ட தங்களது 2 உறவினர்களை தேடி புவனேஸ்வர் வந்தடைந்த அவர்கள், இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட மருத்தவமனைகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் இன்னும் அவர்களின் தேடல் முடிவடையவில்லை.

Odisha Train Accident
Odisha Train AccidentTwitter

இவர்கள் அங்குள்ள ஊடகமொன்றில் பேசுகையில், “விபத்திற்கு பிறகு யாரோ இறந்தவர்களின் நம்பரில் இருந்து எங்களுக்கு போன் செய்து, அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக பாலாசேருக்கு புறப்பட்டோம்” என்றுள்ளனர். அப்படி அங்கு சென்ற இவர்கள், முதலில் கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர், பின்னர் அங்கிருந்து தலைநகர் மருத்துவமனைக்கும், இறுதியாக எய்ம்ஸ் மருத்துவனைக்கும் சென்று தேடி அலைந்துள்ளனர். எய்ம்ஸ் வளாகத்திலேயே படுத்துறங்கி இரவைக் கழித்த அவர்கள், இன்று காலை மீண்டும் இறந்தவர்களின் சடலங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.

புகைப்படங்கள், சுய விபரங்கள் அனைத்தும் கொடுத்தும் இன்னும் உடல்கள் கிடைக்கவில்லை!

தேடியலைந்து வலியோடு இருந்துவரும் அவர்கள் கண்ணீரோடு பேசுகையில், “என் சகோதரனும், சகோதரியின் மகனும் நேபாளத்திலிருந்து வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை, இரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளான ரயிலில் அவர்கள் பயணம் செய்தனர். வெள்ளிக்கிழமை மாலை விபத்து ஏற்பட்டதற்கு பிறகு எங்களுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. பெட்டியில் இருந்து உடல்களை மீட்கக்கூடிய உள்ளூர் நபர் ஒருவர், எங்கள் உறவினரின் நம்பரிலிருந்து எங்களை அழைத்தார். உங்கள் உறவினர்கள் ரயில் விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரிவித்தார்.

Nepal family
Nepal familyOTV

உடனடியாக பாலசோருக்கு வந்தோம். பின்னர் பாலசோர் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளை சுற்றி பார்த்தோம் ஆனால் எங்கும் எங்கள் உறவினர்கள் கிடைக்கவில்லை. பின்னர் எங்களை அங்கிருந்து புவனேஸ்வர் செல்லச் சொன்னார்கள். புவனேஸ்வரை அடைந்த பிறகு, நாங்கள் மூன்று மருத்துவமனைகளையும் பார்வையிட்டோம்.

அவர்கள் காட்டிய உடல்கள் எதுவும் புகைப்படத்துடன் பொருந்தவில்லை. நீண்ட தேடலுக்கு பிறகு நாங்கள் ஒரு உடலை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் மற்றொரு உடலைத் தேடுவது இன்னும் முடியாமல் தொடர்கிறது. புகைப்படங்கள், சுயவிபரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் காண்பித்தும் பலனில்லை. எங்களை வேறு வேறு மருத்துவமனைக்குப் போகுமாறுதான் சொல்கிறார்களே தவிர, எங்களுடைய பிள்ளை எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது நீங்கள் சொல்லுங்கள், நிற்கதியாக நிற்கும் நாங்கள் என்ன செய்வோம்” என்றனர்.

இவர்களின் துயரம், நாட்டையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com