‘திருப்பதி பக்தர்களே உஷார்..’ - போலி இணையதளம் மூலம் நடக்கும் மோசடி

திருமலை திருப்பதி தேவஸ்தான வெப்சைட் போல் தோற்றமளிக்கும் மேலும் ஒரு போலி வெப்சைட் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
tirupati temple
tirupati temple File Image

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் மூலம் அவற்றை முன்பதிவு செய்கின்றனர். இதுதவிர தேவஸ்தானத்திற்கு மின் உண்டியல் மூலம் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களும் அதே வெப்சைட்டை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவஸ்தானம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் அந்த வெப்சைட் பக்தர்களுக்கு பயன்படுகிறது.

இந்த நிலையில் தேவஸ்தானத்தின் வெப்சைட் போன்ற தோற்றத்தில் இருக்கும் போலி வெப்சைட்களை சிலர் ஏற்படுத்தி அதன் மூலம் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பக்தர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற புகார்கள் அடிப்படையில் 10 நாட்களுக்கு முன் தேவஸ்தான தகவல் தொழில்நுட்பத் துறை அளித்த புகாரின் பேரில் 40 போலி வெப்சைட்டுகள் மீது திருப்பதி மலையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அந்த வெப்சைட்டுகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு போலி வெப்சைட் மீது தேவஸ்தான நிர்வாகம் திருமலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த வெப்சைட் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆந்திர மாநில தடய அறிவியல் துறையினரும் போலி வெப்சைட்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இது போன்ற குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் தேவஸ்தானத்தின் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சேவைகளை பெறலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com