ஊழியருக்கு கொரோனா பாதிப்பு : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்
ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனை, காவல்நிலையம், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் உட்படக் குடியரசுத் தலைவர் மாளிகை வரைக்கும் கொரோனா வைரஸ் புகுந்துவிட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் டெல்லியிலிருந்து சிறப்பு ரயிலில் பயணிகளை அனுப்பி வைத்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவருடன் பழக்கத்திலிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது அங்குக் கிருமி நாசினிகள் தெளித்துச் சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.