பாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லி, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் குடியரசு தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினை அவர்கள் குடியரசுத் தலைவரிடம் கூட்டாக வழங்கினர்.
இதற்கு முன்பாக தென்னிந்திய நிதியமைச்சர்கள் மாநாட்டை கேரள அரசு சமீபத்தில் நடத்தியது. மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதியை பகிர்ந்து கொடுப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அந்த மாநாட்டில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, பாஜக அல்லாத மாநிலங்களின் நிதியமைச்சர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளனர். இதில், பஞ்சாப், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. கேரளாவில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் மாநாட்டைப் போல் இந்தச் சந்திப்பிலும் தெலுங்கானா மாநிலம் இடம்பெறவில்லை.