கொரோனாவுக்கு எதிரான போரில் ஓயாத பணி - நெகிழ வைக்கும் டெல்லி இளம் மருத்துவ தம்பதி
ஒரு இளம் டாக்டர் தம்பதி கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் கடந்த சில மாதங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் இந்த நோய்த் தொற்றால் மிகமிக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுக்க கொரோனாவிற்கு 4,40,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கைக் கூடிக்கொண்டே செல்கிறது. இதில் கவலை அளிக்கும் தகவலாக இந்த நோய்க்கு எதிராக நின்று களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்களே அதிகம் பாதிக்கப்படுவதுதான். ஆகவே இவர்களின் சேவையை பாராட்டி மக்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியிலுள்ள இளம் டாக்டர் தம்பதி ஒன்று இந்தக் கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ள செய்தி பலரையும் கவனிக்க செய்துள்ளது. ‘கடந்த சில மாதங்களாகவே இந்தக் கொரோனா தங்களின் மருத்துவ வாழ்வையும் சொந்த வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறது’ என அந்தத் தம்பதி தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவர் டாக்டர் ரஷ்மி மிஸ்ரா. இவருக்கு 28 வயது ஆகிறது. அதேபோல் டாக்டர் இஷான் ரோஹத்கி. இவருக்கு 29 வயதுதான் ஆகிறது. இருவரும் இளம் தம்பதிகள். இவர்கள் இருவரும் டெல்லி லோக் நாயக் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. புதிதாக திருமணமான அனைவரையும் போலவே, இந்த ஜோடியும் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவழிக்கவும், மேற்கொண்டு வெளிநாட்டிற்கு பயணம் செய்யவும் திட்டமிட்டிருந்தது. அந்தத் திட்டங்கள் அனைத்தும் இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஆகவே, ரஷ்மியும் இஷானும் இந்த மருத்துவ சேவையில் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை சந்திக்கவே இல்லை. வெறுமனே வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவதோடு சரி. ஒட்டுமொத்த நேரத்தையும் இந்தத் தம்பதி மருத்துவ மனையிலேயே கழிக்கத் தொடங்கியுள்ளது. ஆகவேதான் இவர்களின் சேவை இன்று தேசத்தின் தலைப்புச் செய்தியாக வலம் வர தொடங்கியிருக்கிறது.
இது குறித்து டாக்டர் இஷான் ரோஹத்கி, "மார்ச் மாதத்திலிருந்து நாங்கள் எங்கள் குடும்பங்களைச் சந்திக்கவில்லை. வீடியோ கால் உரையாடல்கள் மூலம் மட்டுமே செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம்”என்று என்டிடிவிக்கு தெரிவித்துள்ளனர். இது பற்றி டாக்டர் இஷான் ரோஹத்கி, "நாங்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறோம்" எனக் கூறியுள்ளார்.