கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 4,71,821 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையானது 21,297 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கொடிய கொரோனா தொற்றிலிருந்து, இதுவரை 1,14,711 நபர்கள் குணமாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமூக விலகல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அடுத்த 20 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முழு முடக்கம் மட்டுமே தீர்வாகாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ் “மக்களை வீடுகளுக்குள் இருக்கச்சொல்வது நோய் பரவலை தடுத்து சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். ஆனால், இதனால் கொரோனா பெருந்தொற்றை அழித்துவிடமுடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 6 முக்கிய அம்சங்களில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவதாக சுகாதாரத் துறையை விரிவுப்படுத்தி, சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஒவ்வொரு சமூகத்திலும் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
மூன்றாவதாக பரிசோதிக்கும் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
நான்காவதாக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும்.
ஐந்தாவதாக, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்கு தொற்று பரவியிருக்கக்கூடும் என்பதை கண்டறிய தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஆறாவதாக, கொரோனாவை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

