கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு?

கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு?
கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு?

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கை குழுவின் வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் வரைவு அறிக்கை பரிசீலனையில் உள்ளது. அதில், பனிரெண்டாம் ‌வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த மேற்படிப்பை தொடர வேண்டுமானாலும் ஒரு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில் எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை  இடம்பெற்றுள்ளது. 

அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு என்னும் பரிந்துரை ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் அதற்கான நுழைவுத் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி நடத்தப்படும் நுழைவுத்தேர்வானது, அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் எஸ்.ஏ.டி தேர்வுகளுக்கு இணையானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனமான என்.டி.ஏ அமைப்புதான், இந்தத் தேர்வையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நுழைவுத் தேர்வானது, பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்குத் தயார்செய்வதற்கான புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் என்றும் கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் பொது நுழைவுத் தேர்வானது மாணவர்களின் வசதிக்கேற்ப ஒரு ஆண்டில் பலமுறை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறன் அறிவு, மொழித்திறன் மற்றும் தேர்ந்தெடுக்க உள்ள சிறப்பு பாடப்பிரிவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்தத் தேர்வானது நடத்தப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் தேசியக் கல்விக் கொள்கைக் கு‌ழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்ய மக்களிடம் கருத்து கேட்பதற்கு தேசிய தேர்வு முகமை பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்.இபி கமிட்டி கூறுகையில், “இந்த தேர்வு முறை மாணவர்களுக்கு அனுபவங்களை கற்றுக்கொடுக்கும். வரும்காலங்களில் தன்னை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக அமையும். தற்போதைய கல்வி கொள்கையில் அவ்வாறு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com