பீகார் வெள்ளத்தில் சரிந்து மூழ்கிய 3 மாடிக்கட்டடம் - வீடியோ
கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி பகுதியில் உள்ள 3 மாடிக்கட்டடம் தண்ணீரில் சரிந்து விழுந்து மூழ்கிய காட்சி வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையால் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மழையால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழையால் இதுவரை மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு நிவாரண பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி பகுதியில் உள்ள 3 மாடிக்கட்டடம் தண்ணீரில் சரிந்து விழுந்து மூழ்கிய காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கிய 3 மாடிக்கட்டடம் ஒருபுறமாக சரிந்து தண்ணீருக்குள் மூழ்குகிறது.
அங்கு நின்றிருந்த சிலர் தப்பித்து பாதுகாப்பான பகுதிக்கு ஓடி வருகின்றனர். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வெள்ளத்தின் கொடுமையை இந்த வீடியோ விளக்குவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.