ஹரியானாவில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் மனேஷர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் கடந்த மே 21ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண் 6 மாத கர்ப்பிணி என்பதால் மாதாந்திர பரிசோதனை மேற்கொள்ள சென்றார். பரிசோதனை முடிந்த பின்னர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவருக்கு சிரமமாக இருந்துள்ளது. இதனையடுத்து ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றியுள்ளார். கணவர் வீடு திரும்பி வெகு நேரமாகியும் அந்தப்பெண் வரவில்லை. இதற்கிடையில் ஆட்டோ ஓட்டுநர் பயணத்தின் போது அந்தப்பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் தந்துள்ளார். அதன்பின்பு அவர் சுயநினைவை இழந்துள்ளார். இதனைப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்தப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மனேஷர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை.