ஊரடங்கை மீறியதாக 900 பேர் வழக்கு ? - டெல்லி போலீஸ் அதிரடி
டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக 900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுரை கூறி வருகின்றன. 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆரம்பம் முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிக்கொண்டிருந்த 900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் இன்று மாலை முதல் மார்ச் 31ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

