
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பண்டிசேரி கிராமத்தைச் சேர்ந்த 14 பக்தர்கள், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களின் வாகனம் அன்னமய்யா மாவட்டம் மடம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. கடப்பாவில் இருந்து சித்தூர் நோக்கிச் சென்ற லாரியொன்று, இந்த வாகனம் மீது மோதியுள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே டிரைவர் அனுமந்த் (30), அனுமந்த் (40), அம்பிகா (14), ஷோபா (34) மானந்தா (32) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கேவி.பள்ளி காவல்நிலைய போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பீலேரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த 7 பேர் திருப்பதி ரூயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் பெங்களூரில் இருந்து ஓடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு நோயாளியுடன் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தெல்லகுண்டலப்பள்ளி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள், அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.