85 சதவிகித இந்தியர்களுக்கு அரசு மீது நம்பிக்கை: ஆய்வில் தகவல்
இந்தியாவில் 85 சதவிகித மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நாடுகளில் அரசு நிர்வாகம் மற்றும் மக்கள் நம்பிக்கை என்ற பெயரில் ஆய்வு நிறுவனமான பி.ஈ.டபிள்யூ ஆய்வு மேற்கொண்டது. அதில், அரசு மீது ஐந்தில் நான்கு பங்கிற்கும் அதிகமான அதாவது 85 சதவீத இந்தியர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2012-ஆம் ஆண்டு முதல் 6.9 சதவீதத்திற்கும் குறையாமல் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. வலிமையான ஜனநாயக நாடாக 70 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தியாவில், ஆச்சரியம் அளிக்கும் வகையில், சர்வாதிகார ஆட்சி அல்லது ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்று 55% பேர் ஏதோ ஒருவகையில் நினைக்கின்றனர் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
அதேபோல் 27% பேர் வலிமையான ஒரு தலைவர் தேவை என்று கருத்து தெரிவித்துள்ளனர். நிபுணத்துவம் பெற்றவர்களால் அரசு நடத்தப்படுவது அவசியம் என்று பெரும்பாலோர் கூறிய 3 ஆசிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.