இந்தியாவில் 83 சதவீதத்தினர் தொழில் தொடங்க விரும்புகிறார்களாம்...!
உலக அளவில், இருக்கும் வேலையை விட்டு விட்டு, சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்தியாவில் தான் அதிகம் இருப்பதாக ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது.
ரான்ஸ்டாட் ஒர்க்மானிட்டர் நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பில், இந்தியாவில் வாழும் 83 சதவீதம் பேர், தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை உதரிவிட்டு, தொழில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் அதிகம். இதே போன்ற எண்ணத்துடன் உலக அளவில் 53 சதவீதம் பேர் தான் உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
இதில் 45 முதல் 54 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களில் 37 சதவீதத்தினரே தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 72 சதவீதத்தினரும், 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 61 சதவீத்தினரும் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாக கருத்து கணிப்பு கூறுகிறது.
இந்தியாவில் தொழில் தொடங்க ஏற்ற சூழல் நிலவுவதாக 86 சதவீதத்தினரும், இந்திய அரசு புதிதாக தொழில் தொடங்குவோருக்கு நல்ல ஊக்கம் கொடுப்பதாகவும், சாதகமான சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும் 84 சதவீதத்தினர் கருதுகின்றனர்.
மேலும், 76 சதவீதத்தினர் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனத்திலும், 69 சதவீதத்தினர் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு உலகம் முழுவதும் 33 நாடுகளைச் சேர்ந்த 16 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களிடம் இணையதளம் மூலமாக எடுக்கப்பட்டதாக ரான்ஸ்டாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.