கணவனை தாக்கி அவரது கண் முன்னே மனைவியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அஸ்ஸாமில் நடைபெற்றுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நாகௌன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், கடந்த வியாழக்கிழமை ஹோஜாய் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ஜபர்முக் என்ற இடத்தை சென்றடைந்த போது மிகவும் இருட்டி விட்டதால், மேற்கொண்டு செல்வதற்கு பேருந்தோ அல்லது போக்குவரத்து வசதியோ கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி இருவரும் தவித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ஜோத் அலி என்பவர், தனது வீட்டில் தங்கி விட்டு காலை செல்லலாம் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை நம்பி, அந்த தம்பதியினர் அவருடன் சென்றுள்ளனர். இருவரையும் ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற அந்த நபர், தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார். அது இரவு நேரத்தில் தங்கும் விடுதி போல் இருந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து மர்ஜோத் அலியுடன் சேர்ந்து 8 பேர் தம்பதியினர் தங்கியிருந்த அறைக்கு வந்துள்ளனர். பின்னர் கணவனை அடித்து மயக்க நிலைக்கு கொண்டு சென்ற அவர்கள், கணவனின் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்க நிலையிலும் தனது மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனை மேலும் அடித்து சுய நினைவை இழக்கச் செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கூறி, பின்னர் தம்பதிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நாகௌன் மாவட்ட எஸ்பி, மோர்ஜத் அலி உள்ளிட்ட 8 பேரையும் இன்று காலை கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கவே தம்பதிகளை அழைத்து வந்ததாகவும், அவர்கள் தனியாக இருந்ததால் கணவனை தாக்கி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.