மக்களவைத் தேர்தலில், அதிகபட்சமாக பீகாரில் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என வாக்காளர் ஒருவர் விரும்பினால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். அதாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இடம்பெற்றிருக்கும் நோட்டா பொத்தானை அழுத்துவதுன் மூலம், ‘வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்ற நம் முடிவும் கணக்கில் கொள்ளப்படும்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் அதிகப்பட்சமான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. மொத்தமாக 8 லட்சம் பேர் அங்கு நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அதில் கோபால்கஞ்ச் தொகுதியில் மட்டும் 51 ஆயிரத்து 660 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அதாவது அந்த தொகுதியில் சராசரியாக 5.04 பேர் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க விரும்பவில்லை எனக்கூறி நோட்டா பொத்தானை அழுத்தியுள்ளனர்.
பீகாரில் மொத்தம் பதிவான வாக்குகளில், 2 சதவிகிதம் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. நோட்டாவுக்கான வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது, அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் மீதான அதிருப்தியை காட்டுவதாக அமைந்துள்ளது.