4400 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பம் ! அதிர்ச்சியில் மகாராஷ்டிர அரசு
அரசு அறிவித்த 4400 காலியிடங்களுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு வேலைகளுக்கான 4400 காலியிடங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களை கண்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை வைத்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவிடலாம் என்று அம்மாநில அரசு கருதியது.
ஆனால் விண்ணப்பங்கள் லட்சக்கணக்கில் குவிந்ததால் மகாராஷ்டிர அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதாவது வெறும் 4400 காலியிடங்களுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறிப்பாக 1218 காலியிடப்பணிங்களை கொண்ட வன காவலர் வேலைக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலைக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் என்ற நிலையில் பட்டம் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்களது நிறுவனங்களில் வேலையில் பணியமர்த்த பல்வேறு தேர்வுகளை வைத்து அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளை தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கின்றன. அதனால் பலரும் தனியார் நிறுவனங்களை தவிர்த்து அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வேளாண் நிபுணர் கிஷோர் திவாரி, கிராமப்புறங்களில் அரசு வேலை என்பது லாட்டரி போல பார்க்கப்படுகிறது. அரசு வேலை என்பது அவர்களது கெளரவம் சார்ந்த விஷயமாக உள்ளது.
அரசு வேலையில் உள்ளவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்ற நிலை கிராமங்களில் நிலவுகிறது. அரசு வேலைக்குள் நுழைந்துவிட்டால் வாழ்க்கை முழுவதுக்கும் பிரச்னை இல்லை என்ற பாதுகாப்பு உணர்வு நிலவுகிறது. அதனாலே அரசு வேலைக்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.