வெளிநாட்டுச் சிறைச்சாலைகளில் 8,189 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் மட்டும் 3087 இந்தியர்கள் சிறைக் கைதிகளாக இருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஆயிரத்து 811 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயிரத்து 392 பேரும் சிறையில் உள்ளதாக தெரிவித் தார். அண்டை நாடான நேபாளத்தில் ஆயிரத்து 160 இந்தியர்கள் பல்வேறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதிகபட்சமாக வளைகுடா நாடுகளில் மட்டும் மூவாயிரத்து 87 இந்தியர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு மே 31ஆம் தேதிவரை என மொத்தம் எட்டாயிரத்து 189 இந்தியர்கள் வெளிநாட்டுச் சிறைகளில் உள்ளதாக அவர் பதில் அளித்துள்ளார்.

