இந்தியா
எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஃபேல் போர் விமானங்கள் தரையிறக்கம்
எரிபொருள் நிரப்ப ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஃபேல் போர் விமானங்கள் தரையிறக்கம்
பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும், ஏழு மணி நேர பயணத்திற்கு பின் திட்டமிட்டப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கியுள்ளன.
பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த 36 விமானங்களும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.
முதற்கட்டமாக 2020 மே இறுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் என முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக இந்தியாவுக்கு வருகின்றன.
நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட இந்த 5 ரஃபேல் விமானங்களும், ஏழு மணி நேர பயணத்திற்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் டஹ்ரா விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டன. இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்த விமானங்கள் நாளை ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வந்தடையும். மீதமுள்ள விமானங்கள் ஆகஸ்ட் மாதம் வர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். இதில் இரட்டை இருக்கை மற்றும் ஒரு இருக்கை கொண்டவை போர் விமானங்கள் ஆகும். தாக்குதல் ரகத்தைச் சேர்ந்த இந்த ரஃபேல் விமானங்கள், வானிலிருந்தே இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டவை ஆகும்.