டெங்குவால் சிறுமி பலி: ஆதாரங்களை மருத்துவமனை அழிப்பதாக பெற்றோர் புகார்
டெல்லியில் 7-வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், சிகிச்சை அளித்ததற்கான ஆதாரங்களை அழிக்க மருத்துவமனை முயன்றதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
குர்கான் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பவரது 7-வது மகள் அத்யா சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அனுமதித்த நாள் முதல் சிறுமி அத்யாவுக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஆர்.ஐ., சிடி என பல்வேறு ஸ்கேன்களை எடுத்துள்ளனர். ஆனால் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமிக்கு வெறும் 15 நாட்கள் மட்டும் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ரூ.15,79,322 கட்டணம் வசூலித்துள்ளனர். 20 பக்கங்கள் கொண்ட பில் விவரங்களை ஜெய்ந்த் சிங்கின் உறவினர் ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பில்லில் 660 சிரஞ்சுகள், 2,700 கையுறைகள் இடம்பெற்றிருந்தன. இந்த செய்தி வைரலாக பரவி பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகள் இறந்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், மருத்துவமனையில் வெறும் 15 நாள் சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் கட்டணம் வசூலித்ததாகவும், சிகிச்சை அளித்ததற்கான ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை மீதான புகார் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, மருத்துவமனையின் நில உரிமையை ரத்து செய்யுமாறு குர்கான் நகராட்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் வலியுறுத்தியுள்ளார்.