ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைச் சிகரமான கிளிமன்ஜாரோவில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ளது கிளிமன்ஜாரோ சிகரம். கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரமுள்ள இந்த சிகரத்தில் ஏறுவதை பல்வேறு நாட்டினர் வழக்கமாக வைத்துள்ளனர். இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த சமன்யு பெத்துராஜூ என்ற 7 வயது சிறுவன் ஏறி இந்தியக் கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளான். அவனுடன் அவனது அம்மா லாவண் யா, பயிற்சியாளர் தமினேனி பரத், சங்கபண்டி சுருஜனா, மற்றும் தான்சானியா மருத்துவர் ஒருவர் உடன் சென்றுள்ளனர்.
இந்தச் சாதனை பற்றி சமன்யு கூறும்போது, ’மலையேறிய அன்று மழை பெய்தது. சாலை முழுவதும் கற்களாகக் கிடந்தன. பயந்துவிட்டேன். என் கால்கள் வலிக்கத் தொடங்கின. இடையில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு நடந்தோம். எனக்குப் பனியை அதிகம் பிடிக்கும். அங்குச் செல்வதற்கு அதுதான் காரணம். இந்தச் சிகரத்தின் உச்சிக்குச் செல்ல ஐந்து நாட் கள் ஆனது’ என்றான்.
நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகரான சமன்யுவுக்கு அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உலக சாதனை படைத்தால் கண்டிப்பாக அவரை சந்திக்க வைக்கிறேன் என்று அவனது அம்மா உறுதியளித்திருக்கிறார்.
’அடுத்து அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறோம். அங்குள்ள உயர்ந்த சிகரத்தைத் தொட்டு உலக சாதனை முயற்சியை மேற்கொள்கிறான் சமன்யு’ என்றார் அவனது அம்மா லாவண்யா.