“அப்துல்லா ரியல் ஹீரோவை சந்தித்து விட்டான்”- சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் மன்னர்
துபாய் பட்டத்து இளவரசரை சந்திக்க வேண்டும் என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது இந்திய சிறுவனின் விருப்பம் நிறைவேறியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறுவன் அப்துல்லா ஹுசைன். இந்தச் சிறுவன் புற்றுநோயின் மூன்றாம் கட்டத்துக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் சிறுவனால் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அப்துல்லா, யூடியூப்பில் வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.
அப்போது துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானின் செயல்பாடுகள் அப்துல்லாவை மிகவும் ஈர்த்துள்ளன. அவரின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த அப்துல்லா, சிறிது நாளில் ஷேக் ஹம்தானின் தீவிர ரசிகனாக மாறிவிட்டான். இதனைத்தொடர்ந்து ஷேக் ஹம்தானியை சந்திக்க ஆசைப்படுவதாக தனது விருப்பத்தை ஒரு வீடியோ பதிவில் தெரிவித்திருந்தான் சிறுவன் அப்துல்லா.
அந்த வீடியோவில் “ ஷேக் ஹம்தானி மிகவும் கூலானவர். அதேநேரம் துணிச்சல் மிக்கவரும் கூட. நான் அவரது செல்லப் பிராணிகளையும், ஆடைகளையும் பார்க்க வேண்டும். மேலும் வீடியோவின் இறுதியில் “ நான் உங்களின் தீவிர ரசிகன். உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறியிருந்தான். இந்த வீடியோவை அப்துல்லாவின் தாயார் பாத்திமா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த தகவல் அரபு நாட்டின் தனியார் செய்தி நிறுவனம் மூலம் துபாய் இளவரசருக்கு சென்றது.
இதனைத்தொடர்ந்து ஷேக் ஹம்தானியின் அரண்மனையில், அப்துல்லாவும் அவரது குடும்பமும் துபாய் இளவரசரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அப்துல்லாவும் அவரது குடும்பத்தினரும், ஷேக் ஹம்தானியை அவரது அரண்மனையில் சந்தித்தனர். அப்துல்லாவை பார்த்த உடனே ஷேக் ஹம்தானி அவனை ஆர தழுவிக்கொண்டார். மேலும் அவரது பெற்றோர்களிடம் அவனது சிகிச்சை பற்றி கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து துபாய் இளவரசருக்கு குதிரை ஓவியம் ஒன்றையும் ஹைதராபாத்தின் அடையாளமாக கருதப்படும் சார்மினார் ஓவியத்தையும் அந்த சிறுவன் பரிசாக வழங்கியுள்ளான்.
இந்த சந்திப்பு பற்றி அப்துல்லாவின் தாயார் பாத்திமா கூறும்போது “ அப்துல்லா அவனது உண்மையான கதாநாயகனை சந்தித்து விட்டான். ஷேக் ஹம்தானியின் கனிவும், எளிமையும் எங்களை உண்மையில் நெகிழ வைத்து விட்டன. அவர் ஒரு அரசர் போல எங்களிடம் நடந்து கொள்ளவில்லை” என கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து துபாய் இளவரசர் ஷேக் ஹம்தானி தனது இன்ஸ்டாகிராமில், அப்துல்லா குடும்பத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ஒரு தைரியமான சிறுவனை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இளவரசரின் யானைகளோடு அப்துல்லா விளையாடி மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.