”மற்றொரு 'வியாபம்'?” - ம.பி. பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரியில் தேர்வு எழுதிய 7 பேர் முதலிடம்!

மத்தியப் பிரதேசத்தில் பட்வாரிகள் (வருவாய்த் துறை ஊழியர்கள்) ஆட்சேர்ப்பின்போது அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்twitter

மத்தியப் பிரதேசத்தில் பட்வாரிகள் (வருவாய்த் துறை ஊழியர்கள்) ஆட்சேர்ப்புக்கான தேர்வு, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகி உள்ளன. அதில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 7 பேர் மட்டும் ஆளும் பாஜக அரசின் எம்எல்ஏவுக்குச் சொந்தமான மையத்தில் தேர்வெழுதியது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது, முதலிடம் பிடித்த 10 பேரில் 7 பேர் ஆளும் பாஜக எம்.எல்.ஏவான சஞ்சீவ் குஷ்வாஹாவுக்குச் சொந்தமான குவாலியரை தளமாகக் கொண்ட என்ஆர்ஐ பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதி உள்ளனர். இதைவைத்தே காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அருண் யாதவ், ”இது மற்றொரு 'வியாபம்' போன்ற ஊழலைக் குறிக்கிறது. இது, மத்தியப் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்த பெரிய ஆட்சேர்ப்பு மோசடியை நினைவுபடுத்துகிறது. இங்கு பாஜக ஆதரவு தேர்வாளர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். பெரும்பாலான விண்ணப்பத்தாரர்கள் இந்தியில் விடை எழுதியுள்ளனர். ஆனால் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால் உண்மையான விண்ணப்பத்தாரர்களுக்குப் பதிலாக போலியான தேர்வர்கள் இடம்பெற்றிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் அருண் யாதவ்வின் இந்தக் கருத்தை மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “ஆட்சேர்ப்பு தேர்வில் எந்த முறைகேடும் இல்லை நடைபெறவில்லை. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் இந்தப் பிரச்னையை எழுப்புகிறது. காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள மையத்தில் 7 பேர் அல்ல, 114 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற ஏழு பேர் பற்றி மட்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

அந்த குறிப்பிட்ட மையத்தில் மொத்தம் 114 பங்கேற்பாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அப்படியிருக்கையில், ஏன் அந்த 7 பேரின் தேர்ச்சியைப் பெரிதாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் தன்னுடைய குற்றச்சாட்டு மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயல்கிறது” என்று மிஸ்ரா கூறினார்.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் உரிமையாளரும் எம்.எல்.ஏவுமான சஞ்சீவ் குஷ்வாஹா, “அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். எனினும், அவருக்குச் சொந்தமான கல்லூரி மையத்தில் தேர்வெழுதிய 7 பேரின் தேர்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com