ராஜஸ்தான் | இடிந்து விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை.. 7 குழந்தைகள் உயிரிழப்பு!
ராஜஸ்தானில் அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டதில் 7 குழந்தை உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
7 குழந்தைகள் உயிரிழப்பு..
ராஜஸ்தானின் ஜாலாவாரில் உள்ள மனோகர்தனா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்தது.
அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.
ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் குழந்தைகள் மீட்க்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்த குழந்தைகள் அருகிலுள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலைய்ல், ஜாலாவார் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அமித்குமார் சம்பவ இடத்திற்கு சென்று உதவிகளை செய்துவருகின்றனர்.
விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜஸ்தானின் ஜாலாவாரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் துயரமானது. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன் மற்றும் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.