‘ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு காலாவதியானது’ - மத்திய அரசு
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு காலாவதியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு வெளியிட்ட ஆணைக்கு எதிராக அப்பாஸ் என்பவர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 28ம் தேதி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவா கூறியுள்ளார். அதில், கருணை மனுக்கள் தள்ளுபடியானாலும் குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவுகள் 432, 435-ன் கீழ் அரசு முன்விடுதலை செய்யலாம் என்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் அப்பாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு காலாவதியானது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மத்திய அரசின் பதில் மனுவைத் தொடர்ந்து 7 பேரின் விடுதலை விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என பேரறிவாளனின் வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலகா பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வாறு கடந்த 25 வருடங்களை கடந்து 7 பேர் விடுதலை என்பது முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.