கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு போன்ற காரணங்களால் திரையரங்குகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில முன்னணி நடிகர் நடிகைகளின் படங்கள் தற்போது ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட உள்ளன. தமிழில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வரும் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழில் ஏற்கெனவே சில திரைப்படங்கள் நேரடியாக ஆன்லைன் தளங்களில் வெளியிடப்பட்டு இருந்தாலும், முன்னணி நடிகர், நடிகைகளின் படம் வெளியானது இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் முன்னனி நடிகர்களின் பார்வையும் ஆன்லைன் தளங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குயின் திரைப்படம், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ திரைப்படம் என மொத்தம் 7 திரைப்படங்கள் வரும் மாதங்களில் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளன.
தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைன் தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய முறையை சினிமா ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.