7 மாதங்கள்.. 6 மாலுமிகள்! பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் இந்தியா!
செய்தியாளர் - M.மீரா
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் கடந்த 7 மாதங்களாக 6 இந்திய மாலுமிகள் கப்பலிலேயே சிக்கி தவிப்பதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கப்பலில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாகவும் , மாலுமிகளின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் வினீத் கிஷோர் மிஸ்ரா. இவர் வணிகக் கப்பல் துறையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருடன் மேலும் 5 இந்திய மாலுமிகள் கராச்சி துறைமுகத்தில் சிக்கியுள்ளனர். இவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானைச் சேர்ந்த KEVER Shipping நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 25, 2026 அன்று வினீத் பணியில் சேர்ந்துள்ளார். ஓமனில் இருந்து கப்பலில் பயணம் செய்த அவர், ஏப்ரல் 17ஆம் தேதி கராச்சி துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளார்.
அப்போது கப்பல் நிறுவனத்துக்கும் துறைமுக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கடந்த பல மாதங்களாகக் கப்பலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கப்பலில் முறையாக மின்சாரம் கிடைப்பதில்லை என்றும், செல்போன் தொடர்பு கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடும்பத்தினருடன் பேச முடிவதாகவும் கூறியுள்ளனர். வினீத்தின் பணிக்கால ஒப்பந்தம் முடிந்துவிட்டபோதும், அவர் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வினீத்தின் மனைவி நேஹா மிஸ்ரா, இரண்டு குழந்தைகளுடன் கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார். அவரது தந்தையும் ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான லலித் கிஷோர் மிஸ்ராவும் மகனை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டு, 6 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

