காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிற்கும் 7 முக்கியச் சவால்கள்! சாதிப்பாரா?

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிற்கும் 7 முக்கியச் சவால்கள்! சாதிப்பாரா?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிற்கும் 7 முக்கியச் சவால்கள்! சாதிப்பாரா?

1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் சேவையாற்றத் துவங்கிய மாபண்ண மல்லிகார்ஜுன கார்கே 53 ஆண்டு கால நெடும்பயணத்திற்கு பின்னர் அக்கட்சியின் அகில இந்திய தலைவராக உருவெடுத்துள்ளார். மீண்டும் புத்தொளி பாய்ச்சி அரியணை நோக்கி காங்கிரஸ் கட்சியை நகர்த்தும் பொறுப்பு கார்கேவிடம் வந்து சேர்ந்திருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பின்னர் காந்தியல்லாத ஒரு தலைவரை காங்கிரஸ் கட்சி காண உள்ளது. அக்கட்சியின் அடுத்த தலைவராக, தோல்விகளில் இருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் மீட்பராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுன கார்கே முன்னிற்கும் 7 முக்கியச் சவால்கள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்,

1. சட்டசபை தேர்தல்களை வெல்வதே முக்கியச் சவால்!

அடுத்தடுத்து நடைபெற உள்ள முக்கிய சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதே புதிய கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகார்ஜுன கார்கே முன் உள்ள முக்கிய சவாலாக திகழ்கிறது. இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி பூசல்களை முடிவுக்கு கொண்டு வந்து, பாரதிய ஜனதா கட்சியை இந்த மாநிலங்களில் வீழ்த்துவதன் மூலம் மல்லிகார்ஜுன் கர்கே வலுவான காங்கிரஸ் தலைவராக முத்திரை பதிக்க முடியும். வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற முக்கிய முடிவுகளில் சுதந்திரமாக செயல்பட்டால், காந்தி குடும்பத்தின் கைப்பாவை என்கிற குற்றச்சாட்டையும் தவிர்க்க இயலும்.

2. எதிர்க்கட்சிகளின் தலைமையாக காங்கிரஸ் கட்சியை நிறுவுவது அடுத்த சவால்!

தொடர்ச்சியாக தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கிறது என்றும் பாஜகவை வீழ்த்த காங்கிரசால் முடியாது எனவும் பிற எதிர்க்கட்சிகள் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வது மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது. பாஜகவை தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம் மல்லிகார்ஜுன் கர்கே காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகளின் தலைமையாக மீண்டும் நிலை நிறுத்த முடியும். இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி என்கிற நிலையில், மல்லிகார்ஜுன் கர்கே தனது முதல்கட்ட சவாலை இங்குதாம் சந்திக்க உள்ளார்.

3. தோல்வியை கண்டு துவளாது இருப்பது முக்கியச் சவால்:

அடுத்த வருடத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு மக்களவை தேர்தல்கள் மற்றும் பல சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்ததால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமை கேள்விக்குறியானது. அதே போன்ற சூழல் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே, 2024 மக்களவைத் தேர்தலில் மல்லிகார்ஜுன் கர்கே எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒன்றிணைக்க முடியும்.

4. காந்தி குடும்பம் முன்மொழியும் தவறான முடிவுகளை தவிர்ப்பதும் சவால்தான்:

அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகாவில் சீதாராமையா ஆதரவாளர்கள் மற்றும் டி கே சிவகுமார் ஆதரவாளர்களிடையே உள்ள பிளவை நீக்கி, காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி தேடி தருவது மல்லிகார்ஜுன் கர்கே பெறக்கூடிய முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இதுவரை நடந்தது போலவே சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் முக்கிய முடிவுகளை கட்சி மீது திணித்தால் பஞ்சாப் மாநிலத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். சசி தரூருக்கு கிடைத்த ஆயிரம் ஓட்டுகள் மல்லிகார்ஜுன் கர்கேவுக்கு எதிரான வாக்குகள் அல்ல எனவும் காந்தி குடும்பத்திற்கு எதிரான வாக்குகள் எனவும் கட்சிக்குள் கருதப்படுகிறது.

5. தென்னிந்தியரான கார்கே வட இந்தியர்கள் மனங்களையும் வெல்ல வேண்டியது அடுத்த சவால்:

தென்னிந்தியாவை சேர்ந்தவராக மல்லிகார்ஜுன கார்கே இருப்பது வடமாநிலங்களில் சந்திக்கும் சவாலாக இருக்கும் எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். உத்திர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களில் ஒரு தென்னிந்திய தலைவர் பெரும் சக்தியாக உருவாகுவது சுலபமில்லை என்பது அவர்களது கருத்து. அதே சமயத்தில் மல்லிகார்ஜுன் கர்கே நன்றாக இந்தி பேசக் கூடியவர் என்பதும், டெல்லி அனுபவம் அதிகம் உள்ளவர் என்பதும் அவருக்கு சாதகமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

6. இளம் தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வது அதிமுக்கியச் சவால்:

இளம் தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வது மல்லிகார்ஜுன் கர்கேவுக்கு இன்னொரு பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. தலைமுறை வித்தியாசங்களை கடந்து 80 வயதான மல்லிகார்ஜுன் கர்கே இளம் தலைவர்களை எப்படி அரவணைத்து செல்கிறார் என்பது அவரது வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய புள்ளியாக திகழும். சச்சின் பைலட் போன்ற இளைய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு உந்து சக்தியாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிப்பது கட்சிக்கு புத்தாக்கம் கொடுக்கும் எனவும் கருதப்படுகிறது.

7. ஓர் இறுதிச் சவால்:

மக்களவையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட இயலாத கையறு நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் அதன் இயல்பான எழுச்சிப்பாதைக்கு திருப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது அடுத்த தலைவராக பதவியேற்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் மிக நன்றாக தெரியும். விரைவாக கட்சிக்கு தேர்தல் வெற்றிகளை பெற்று தராவிட்டால், மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழும் என்பதும் மல்லிகார்ஜுன் கர்கேவுக்கு இறுதிச் சவாலாக உள்ளது.

- கணபதி சுப்ரமணியம், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com