கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையானப் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் அதீத மழை பொழிந்து வருகின்றது. மழையால் உடுப்பி, சிக்மகளூரு, ஹசன், குடகு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய சுமார் 25ஆயிரம் பேரை தீயணைப்புப் படையினர், மாநில மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பெலகாவி, உத்தர கன்னடா, சிவமோகா மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் கடந்த மூன்று தினங்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதனிடையே, வெள்ள நிலைமையை சமாளிப்பதில் மாநில அரசு செயலிழந்துவிட்டதாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. "மாநிலம் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது முதலமைச்சர் எடியூரப்பா எங்கே
சென்றுவிட்டார்?" என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
இதனிடையே கர்நாடக அமைச்சரவையை இறுதி செய்வதற்காக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் எடியூரப்பா, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பெங்களூரு திரும்பினார். பின்னர் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.