மாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய  கும்பல்!

மாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்!

மாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்!
Published on

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக, 68 வயதான முஸ்லிம் முதியவர் ஒருவரை 10 முதல் 12 பேர் வரை கொண்ட கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தாக்குதலுக்குள்ளான முதியவரை பன்றிக்கறியை சாப்பிட சொல்லியும் வற்புறுத்தியுள்ளது அந்தக்  கும்பல். ஏப்ரல் 7ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பின்னர், தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்துதான், இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.  

தாக்குதலுக்கு ஆளான சவுகத் அலி என்ற அந்த முதியவர், வடக்கு அஸ்ஸாம் பகுதியான பிஸ்வநாத்திலுள்ள  வார சந்தைப் பகுதியில் கடந்த 40 வருடங்களாக மாட்டிறைச்சி விற்பனை செய்து வருகிறார். இங்கு மாட்டிறைச்சி விற்பனைத் தடையில்லை. இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சவுகத் அலியின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்து, தாக்குதல் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளதாகவும், 5 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா ஸ்னோவால் கூறியுள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாகவும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சில கும்பல் தனி நபர்களை தாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கக்கூடாது என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதன்பின்னர் மாட்டிறைச்சி உண்பதற்கு தடை இல்லை என்றும், தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் மத்திய அரசின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ச்சியாக மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக தொடர்ந்து கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் தொடர்பாக பல வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வவ்போது பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com