வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 610 பழங்கால தொல்பொருட்கள் !
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வை மேற்கொண்டதா என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மக்களவையில், கேள்விகள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் தொடர்பான திருட்டு வழக்குகளின் புதுப்பித்த தரவுகளைப் பராமரிக்கிறது.
2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று கலைப்பொருட்களும், இங்கிலாந்திலிருந்து ஐந்து கலைப்பொருட்களும் கொண்டு வரப்பட்டன.
2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவிலிருந்து 157 தொல்பொருட்களும், கனடா மற்றும் இங்கிலாந்திலிருந்து தலா ஒன்றும் கொண்டுவரப்பட்டன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை முறையே 105 (அமெரிக்கா) மற்றும் 297 (அமெரிக்கா) ஆக இருந்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2020-24 ஆம் ஆண்டிற்கான மீட்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆகவும், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, தொடர்புடைய புள்ளிவிவரங்கள் 34 ஆகவும் இருந்தன.
2020-24 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் மொத்த எண்ணிக்கை 610 ஆக உள்ளது மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், 1976 முதல் மொத்தம் 655 தொல்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, என்று தெரிவித்துள்ளார்.