அலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்
ஐதராபாத் நகரில் அறுந்து கிடந்த மின்சார வயரில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
ஐதராபாத்தின் நர்சிங்கி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கும் வகையில் உள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், மக்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகள் முன்பாக சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக பலரும் வந்து செல்கிறார்கள்.
அப்போது, சிறுவன் ஒருவன் ஓடி வந்து, வீட்டின் முன்பு இருந்த மின்விளக்கு கம்பத்தை விளையாட்டாக தொடுகிறான். தொட்ட உடனே அசைவின்றி அப்படியே இருக்கிறான். சில நிமிடங்கள் எவ்வித அசைவும் அந்தச் சிறுவனிடம் இல்லை. ஒரு கை மட்டும் கம்பத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.
அவன் அசைவின்றி இருக்கும் நேரத்தில் பலரும் அந்தப் பாதையில் கடந்து செல்கிறார்கள். அருகிலேயே மற்ற சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில நிமிடங்கள் அப்படியே அசைவின்றி இருந்து பின்னர் அந்தச் சிறுவன் கம்பத்தின் அருகில் சரிந்து விழுகின்றான். பின்னர் தான் மற்றவர்கள் அருகில் வந்து பார்க்கிறார்கள். அப்பொழுதுதான், மின் கம்பத்தில் அறுந்துகிடந்த வயரில் கால் பட்டு அந்தச் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நர்சிங்கி காவல் உதவி ஆய்வாளர் ராகவேந்திரா கூறுகையில், “அந்தப் பகுதியில் இதுபோன்று 10 மின் கம்பங்கள் உள்ளன. சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கம்பத்துடன் அசைவின்றி இருந்த பின்னர்தான் சிறுவன் கீழே விழுந்துள்ளார். சிறுவன் கீழே வீழ்ந்துகிடப்பதை பார்த்த மற்ற சிறுவர்கள் செக்யூரிட்டி இடம் கூறியுள்ளனர். சிறுவனை தொட முயற்சித்த போது, செக்யூரிட்டிக்கும் சிறிய அளவில் ஷாக் அடித்துள்ளது.
பின்னர், 6.45 மணியளவில் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு 8.40 மணியளவில் தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவனது பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மகன் உடலை எடுத்துக் கொண்டு நேற்று இரவே அவர்கள் தமிழகம் வந்தனர்.