டிவி நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய 6 பேர் கைது
இந்திய தொலைக்காட்சிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாக ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 820 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மோசடி ஒளிபரப்பு துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ரிஷ்லி நிறுவனம் முகக்கவசம் மற்றும் பிபிஇ கிட் உடைகளை தயாரித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த நிறுவனம் இந்தியா மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாக புகார் எழுந்தது. சுமார் 400 தொலைக்காட்சிகளை இந்த நிறுவனம் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதன் மூலம் 113 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 820 கோடி ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது.
BOSS என்ற இன்டர்நெட் டெலிவிஷன் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், இணையத்தில் ஒளிபரப்புவதற்கு உரிய அங்கீகாரம் பெற்ற Yupp போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இந்த மோசடி புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய சைபர் க்ரைம் காவல்துறை, ஃபரிதாபாத்தில் 2 இடங்களில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
BOSS நிறுவனம் சட்டவிரோதமாக செட்டாப் பாக்ஸ்களை விற்பனை செய்தது தெரியவந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.