தற்கொலைக்கு தூண்டும் ப்ளூவேல் விளையாட்டுக்கு இதுவரை நாடு முழுவதும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் உயிரிழந்தான். தொடர்ந்து கடந்த மாதம் மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் 5 ஆவது, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ப்ளூவேலின் கடைசி கட்ட சவாலை சந்திக்கும் வகையில் தற்கொலைக்கு முயன்றபோது சக மாணவர்கள் காப்பாற்றினர். இந்த சம்பவம் கடந்த 10 ஆம் தேதி நடந்தது. அதே நாளில் மகாராஷ்டிராவில் ப்ளூ வேல் விளையாட்டின் கடைசி நிலையை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 14 வயது சிறுவனை புனே காவல்துறையினர் காப்பாற்றினர்.
மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் கடந்த 12 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டின் பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டார். பிளாஸ்டிக் பையால் முகம் கட்டிய நிலையில் கழிவறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இம்மாதம் 16 ஆம் தேதி கேரளாவில் 22 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கும் ப்ளூ வேல் விளையாட்டு தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவர் கடந்த 27 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
ப்ளூ வேலின் உயிர் குடிக்கும் வேட்டைக்கு நேற்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் பலியாகியுள்ளார். தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அந்த மாணவரின் கைகளில் ப்ளூவேல் அடையாளம் இருந்தது. இன்று வடகிழக்கு மாநிலமான அசாமில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் கவுஹாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.