காது குத்துவதற்காக செலுத்தப்பட்ட மயக்க மருந்து; உயிரிழந்த 6 மாத கைக்குழந்தை!
கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டதில் 6 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சாம்ராஜ்நகரை அடுத்த ஷெட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்-சுபா தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். காது குத்தும்போது குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மயக்க மருந்து அதிக வீரியம் கொண்டதாக இருந்ததால், குழந்தையின் வாயில் நுரை வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.