மும்பை: நர்சிங் மாணவியிடம் அத்துமீறல்; 2 காவலர்கள் உட்பட 6 அதிகாரிகள் அதிரடி கைது!
அண்மை காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகளவில் காணமுடிகிறது. இந்தவகையில், தற்போது மும்பையில் நடந்துள்ள ஒரு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மும்பையில் நர்சிங் கல்லூரியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார் 18 வயது நர்சிங் மாணவி ஒருவர். அச்சமயம் அப்பகுதியில் வசாய் என்ற இடத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட எஸ்யூவி கார் ஒன்றில், கோவாவுக்குச்சென்று கொண்டிருந்துள்ளனர் ஹரிராம், பிரவீன், மாதவ், கேந்த்ரே, ஷியாம் கிதே, சத்வ கேந்த்ரே, சங்கர் கிதே ஆகிய 6 அதிகாரிகள்.
அரசாங்க மற்றும் காவல் அதிகாரிகளான இவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு குடிபோதையில் காரில் பயணித்துள்ளனர். மாலை 5.30 மணியளவில் ஜம்சண்டே கிராமத்தில் உள்ள பஸ் டிப்போவிற்கு அருகே அவர்கள் தங்களின் காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, அங்கே நின்று கொண்டிருந்த நர்சிங் மாணவியிடம் வழிகேட்பது போல நடித்து இவர்கள் அத்துமீற முயன்றதாக தெரிகிறது. இதனால், உடனடியாக அங்கிருந்து விலகி சென்றுள்ளார் அம்மாணவி. இதையடுத்து அம்மாணவியை பின்தொடர்ந்து சென்ற ஹரிராம் என்ற நபர், ஆபாச வார்த்தைகளை கூறியுள்ளார்.
அச்சமயத்தில் காரிலிருந்த மற்ற 5 நபர்களும் காரிலிருந்து வெளியேறி, மாணவியை காரின் உட்புறம் இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது அம்மாணவி அபாயக்குரல் எழுப்பவே, குரலை கேட்ட வழிப்போக்கர்களில் சிலர் உடனடியாக விரைந்து அந்த நபர்களை அடித்து மாணவியை காப்பாற்றியுள்ளனர்.
பிறகு இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில்தான் அந்த 6 பேரில் இரண்டு பேர் போக்குவரத்து காவலர்கள், ஒருவர் cisf அதிகாரி, ஒருவர் srpf அதிகாரி, மேலும் இருவர் அரசாங்க அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து வசாய் போக்குவரத்து காவலர்கள் ஹரிராம் கிதே (34), பிரவீன் ரானடே (33) ஆகியோர் கடமை தவறியதற்காகவும், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை போன்றொரு பெருநகரத்திலேயே அதிகாரிகள் மாணவியிடம் இப்படி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரு நகரத்துக்கே இந்த நிலையெனில், கிராமப்புற பெண்களின் நிலையை யோசித்துப்பார்க்க வேண்டுமென வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.